Guru

  •    > Details
  • மீனம்(குருபெயா்ச்சி)

    மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    நம்பிக்கையோடு முன்னேறினால் மலையும் மடுதான் என்று நினைப்பவர்கள் மீனராசிக்காரர்கள். இவர்களின் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் வெளியே சொல்லவேமாட்டார்கள். இறைநம்பிக்கை மிகுந்தவர்கள். அதேவேளையில் அடுத்தவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள். பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரையிலான நட்சத்திரங்களை உள்ளடக்கிய மீனராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.

    இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் அமைதியையும் தந்த குருபகவான் இப்போது 1.5.24 முதல் 14.5.25 வரை மூன்றாவது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். மூன்றாம் வீட்டில் உங்கள் ராசிநாதன் மறைவதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் செயல்படவேண்டும்.  

    வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கித் தவறானவர்களுடன் சென்றுவிடவேண்டாம். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. யாரையும் அநாவசியமாக வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். என்றாலும் உங்களின் ஏழாவது வீட்டை குரு பார்ப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.


    குருபகவானின் பார்வைப் பலன்கள்

    குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பைசலாகும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கிப் பாசம் கூடும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். மகனின் உயர்கல்வியை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். என்றாலும் உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள்.

    குரு 11 -வது வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசவேண்டாம்.

    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்


    1.5.24 முதல் 12.6.24 வரை சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25

    வரை சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். வேலை கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். புது ஆடை, ஆபரணம், வாகனம் வாங்குவீர்கள். சொத்து சேரும். வீடு மாறுவீர்கள்.

    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

    வியாபாரம் : மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாதீர்கள். வருங்காலச் சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலியுங்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் உண்டு. ஸ்டேஷ்னரி, ஹோட்டல், விடுதிகள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள்.

    உத்தியோகம் : மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களை மட்டம்தட்டிப் பேசுவார்கள். அவர்களிடம் உஷாராக பழகுங்கள். சிலர் எதிர்பாராத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். வேலைச்சுமை குறையும். கணினித் துறையினர்களுக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

    இந்த குரு மாற்றம் வேலைச்சுமை, அலைச்சல், சிறுசிறு ஏமாற்றங்களை தந்தாலும், உங்களை பதப்படுத்தி வெற்றி பெற வைக்கும்.