Guru

  •    > Details
  • கும்பம்(குருபெயா்ச்சி)

    கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    ஊரே கூடி நின்று ஒரு கருத்தைச் சொன்னாலும் தனக்கெனத் தனிக்கருத்து உடையவர்கள் கும்பராசிக்காரர்கள். இவர்களுக்குள் ஆயிரம் ரகசியங்கள் ஒளிந்துகிடக்கும். எளிதாக யாரும் அதை அறிந்துகொண்டுவிட முடியாது. அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரையிலான நட்சத்திரங்களைத் தன்னகத்தே கொண்ட கும்பராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

    இதுவரை முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களை முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 1.5.24 முதல் 14.5.25 வரை நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீட்டிற்குரிய கிரகம் குரு பகவான் என்பதால் தீயபலன்கள் குறையும். என்றாலும் அலைச்சல் இருக்கும். சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

    அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். நீண்ட தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வாகன விபத்துகள் வரக்கூடும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வீண் சந்தேகத்தால் கணவன் - மனைவி பிரிய வேண்டி வரும்.

    குருபகவானின் பார்வைப் பலன்கள்

    குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்ளின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி,உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் கட்டுபாடு தேவை. நேரந்தவறி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள்.

    உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். எந்தப் பிரச்னைக்காவும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக்கொள்ளப் பாருங்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள்.

    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

    1.5.24 முதல் 12.6.24 வரை சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் அக்கறை தேவை. உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் பகை வந்து நீங்கும்.
     
    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25

    வரை சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடிக் கொண்டே போகும். சின்ன சின்ன விபத்துகள் ஏற்படக் கூடும். வயிற்றுவலி, யூரினரி இன்பெக்ஷன், நெஞ்சுவலி வந்து போகும். பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கடனை நினைத்து அவப்போது அச்சப்படுவீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். வம்பு சண்டைகள் வரும்.

    19.8.2024 முதல் 2.12.2024 வரை மற்றும் 5.4.2025 முதல் 14.5.2025 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் இளைய சகோதர வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை மாறுவீர்கள். மறைமுக எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்கள்.

    வியாபாரம் : தொழிலை விரிவுபடுத்தலாம். லாபம் குறையாது. ஆனால் வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தப் புதிய அனுகுமுறைகளைக் கையாளுங்கள். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்பாடாகப் பேசுவார்கள். வளைந்து கொடுத்துப் போங்கள்.

    உத்தியோகம் : வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. குருபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். ஆனாலும் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தடைப்பட்டு வரும்.

    இந்த குரு மாற்றம் உங்களைச் சிலநேரங்களில் அலைக்கழித்தாலும், இறுதியில் நினைத்ததை முடிக்கும் வல்லமையை தரும்.