Guru

  •    > Details
  • ரிஷபம்(குருபெயா்ச்சி)

    ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷபராசிக்காரர்கள், தன் அழகைப் பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மனத்தில் ஆயிரம் இருந்தாலும் அவ்வளவு எளிதாக அவர்களின் பேச்சில் அது வந்துவிடாது. சாமர்த்தியமான பேச்சுக்குச் சொந்தக்காரர்கள். அப்படிப்பட்ட ரிஷபராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைப் பார்ப்போம்.

    குருபகவான் இதுவரை 12 - ம் வீட்டில் அமர்ந்து கட்டுக்கடங்காத செலவுகளைக் கொடுத்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது ராசிக்குள்ளேயே வருகிறார். ஜன்ம குரு பலவிதமான தடைகளை ஏற்படுத்துவாரோ என்கிற கலக்கத்தோடு இருந்தீர்கள் என்றால் அவற்றை விட்டுவிடலாம். பகைவீட்டில் அமர்ந்தாலும் குருபகவான் நற்பலன்களையே தருவார். இதுவரை செலவுகளால் வாடியிருந்த உங்கள் மனம் மலரும். நன்மைகள் தேடிவரும். பெரிய கஷ்டங்கள், நோய்கள் இருப்பதுபோன்ற மனபிரமைகள் விலகும். என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்ல்து. உடற்பயிற்சி யோகா, தியானம் போற்றவற்றைத் தொடர்ந்து செய்துவாருங்கள். அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    ராசிக்கு 5 -ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் நற்பலன்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். அவர்களின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். பித்ருக் காரியங்களை முறையாகச் செய்யத் தடைப்பட்ட சுபகாரியங்கள் தேடிவரும். குலதெய்வக் கோயிலுக்கும் ஒருமுறை போய் வழிபாடு செய்துவருவீர்கள்.

    ராசிக்கு 7 -ம் வீட்டை குருபகவான் பார்ப்பது மிகவும் அற்புதமான விஷயம். குடும்பத்தில் இதுநாள்வரை இருந்த பிரச்னைகள் விலகும். அமைதி பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னை விலகி கருத்தொற்றுமை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.

    ராசிக்கு 9 ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவர் மூலம் எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்னைகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

    1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். என்றாலும் இக்காலகட்டத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காய்ச்சல், சளித்தொந்தரவும், விரக்தி, ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.
     
    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். இளைய சகோதரர் பாசமாக நடந்து கொள்வார். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். சொத்து சம்பந்தப்பட்டப் பிரச்னை சுமுகமாக முடியும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கோயில் விழாவில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், மன இறுக்கமும், திடீர் பயணங்களும், செலவுகளும், வந்துபோகும்.

    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்கள் சப்தம - விரையாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனைவி வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் பள்ளி கல்லூரிச் சேர்க்கைகள் நல்ல விதத்தில் முடியும். வேற்று மொழியினர் உதவுவார்கள். ஆனால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

    வியாபாரம்

    சந்தை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பெரிய முதலீடுகளைச் செய்யுங்கள். வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். மற்றவர்களின் அறிவுரையைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். என்றாலும் லாபம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் கடைக்காரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். என்றாலும் பிரச்னைகளின் விவரங்களை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பது நல்லது.

    உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் வரும். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவியுயரும். சம்பளமும் கூடும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். ஆனால் அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி வரும். கலைஞர்களே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

    இந்த குரு பெயர்ச்சி சவால்களைச் சந்திக்க தேவையான சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும், பணவரவையும் தரும்.